மது பிரியர்களின் கவனத்திற்கு!!! குடிப் பழக்கத்திற்கு அடிமையான வாலிபர் தற்கொலை – சாகும் முன் எழுதிய உருக்கமான கடிதம்…

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
திருச்சிக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டு, பின்பு அதில் இருந்து வெளி வர முடியாததால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக 2 பக்கத்தில் மனதை உருக்கும் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு மின்வாரிய ஊழியர் ஒருவர் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் நவல்பட்டு அருகே அய்யம்பட்டி வல்லாளகண்டன் அய்யனார் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். அவரது மகன் இளையராஜா. இளையராஜா தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இளையராஜாவின் அம்மா, அப்பா மற்றும் அண்ணன் ஆகிய மூவரும் இறந்து விட்டனர்.எனவே இவர் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். தனிமையை போக்கி கொள்வதற்காக இளையராஜா குடிக்க ஆரம்பித்துள்ளார். பின்னர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 14ம் தேதி அன்று மதியம் 12 மணியளவில் திருச்சியில் உள்ள அவரது சித்தப்பா செந்தில்குமார் என்பவருக்கு வீடியோகால் அழைப்பு மூலம் பேசியுள்ளார். அதில் அவரிடம் மிகவும் தாழ்வு மனப்பான்மை கொண்டு பேசியுள்ளார். மேலும் தனக்கு வாழ விருப்பம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

அதன் பிறகு தனக்கு வாழ விருப்பம் இல்லையாதலால் குடிக்க போகும் மது பாட்டிலில் விஷத்தை கலந்து குடிக்க போவதாக தனது சித்தப்பாவிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இளையராஜாவின் சித்தப்பா இளையராஜாவின் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை கேட்ட நண்பர்கள் அவரது வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர்.
அவரது வீட்டின் கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டு இருந்தது. எனவே அவரது நண்பர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது, இளையராஜா தான் குடிக்க வைத்திருந்த மது பாட்டிலில் விஷத்தை கலந்து குடித்து விட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக நண்பர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு இளையராஜாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து இளையராஜாவின் தம்பி ஒருவர் திருச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து திருச்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில், இளையராஜாவின் வீட்டை காவல் துறையினர் சோதனை செய்துள்ளனர். அதில் அவர் சாகும் முன் இரண்டு பக்கத்திற்கு மிகவும் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அக்கடிதத்தில் ,தான் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாகவும் அந்த மதுப்பழக்கத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை எனவும் எழுதியுள்ளார். எனவே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். எனது சாவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை. எனது இறப்பிற்கு முழு காரணம் எனது குடிப் பழக்க அடிமைத்தனம் தான். இதனை நான் சுய சிந்தையுடன் தான் எழுதுகிறேன் எனவும் இளையராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் என்னைப் போல யாரும் குடிக்கு அடிமை ஆகிவிடாதீர்கள். மதுப்பழக்கம் ஒருவரது வாழ்க்கையை எப்படி எல்லாம் தலைகீழாக மாற்றி விடும் என்பதை நான் புரிந்து கொண்டேன். ஆனாலும் என்னால் மதுப்பழக்கதிலிருந்து மீள முடியவில்லை.இன்று நான் இறுதியாக குடிக்கிறேன். மதுவில் விஷம் கலந்து அருந்தி விட்டு உங்கள் அனைவரையும் விட்டு பிரிய போகிறேன். அடுத்த பிறவி என ஒன்று இருக்குமானால் உங்களுக்கே மீண்டும் மகனாக பிறக்க விரும்புகிறேன். அனைவரும் என்னை மன்னியுங்கள். எனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை.

மேலும் அவர் ஒருவரிடம் ரூபாய் 40 ஆயிரமும் மற்றொருவரிடம் ரூபாய் 30 ஆயிரம் கடன் வாங்கி உள்ளதாகவும் எழுதியுள்ளார். அதனுடன் கடன் வாங்கிய நபர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். இளையராஜா ஒருவருக்கு ரூபாய் 2 லட்சம் கடனாக கொடுத்துள்ளார்.மேலும் அந்த பணத்தை பெற்று தான் வாங்கிய கடன்களை கொடுத்து விடவும் என்றும் அந்த நபரின் பெயரையும் எழுதி கையொப்பம் இட்டுள்ளார்.
இந்த கடிதம் வாசிப்பவர்களின் மனதை உருக்கும் வகையில் உள்ளது. இது போல
மன அழுத்தம் இருந்தாலோ அல்லது தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என எண்ணம் தோன்றினாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவிமையம்: 104 ;
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.