சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு முதன்முறையாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சேலம் அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த 26 வயது பெண்ணிற்கும், கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நடந்தது. இதனையடுத்து அந்த பெண் கர்ப்பமடைந்த நிலையில் சேலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்க்கு வந்திருந்தார். மேலும் பிரசவ நேரம் நெருங்க சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் டெலிவரிக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த வாரம் இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை 2.6 கிலோ எடை கொண்டதாக இருந்தது. குழந்தை பிறந்ததில் மகிழ்ச்சி இருந்தாலும், குழந்தை பிறந்ததிலிருந்து அழவில்லை என்பது அனைவருக்கும் சந்தேகத்தை எழுப்பியது.

இதனை தொடந்து குழந்தை மருத்துவர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் குழந்தையின் இதய துடிப்பு அதிகமானதோடு திடீரென்று குழந்தையின் எடையும் குறைய தொடங்கியது. இதனையடுத்து மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
மேலும் குழந்தையை அழ வைக்கவும் மருத்துவர்கள் முயன்றனர். இதய அறுவை சிகிச்சை துறை தலைவர் பொன் ராஜ ராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் குழந்தையை தீவிர பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது குழந்தைக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதை கண்டுபிடித்தனர்.

அதன்படி பிறந்த பிஞ்சுக்குழந்தைக்கு மிகவும் கவனமாக இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் குழந்தை அழத் தொடங்கியது. தற்போது குழந்தையும் தாயும் நலமாக இருக்கிறார்கள்.
பிறந்து 1.45 கிலோ எடை இருந்த பச்சிளம் குழந்தைக்கு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் முதன் முறையாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தையை காப்பாற்றிய இதய அறுவை சிகிச்சை துறைத் தலைவர் பொன் ராஜ ராஜன் மற்றும் மருத்துவக் குழுவினரை டீன் வள்ளி சத்தியமூர்த்தி மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் தனபால் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.

குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்திருந்தால் 5 லட்சம் ரூபாய் வரை செலவாகி இருக்கும். இந்த நிலையில் எந்த செலவும் இல்லாமல் அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்து குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது என டீன் வள்ளி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.